விநியோகத்திற்கு அமைவாக  விலைகள் தீர்மானிக்கப்படும்

விநியோகத்திற்கு அமைவாக அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் தீர்மானிக்கப்படும்: நிதியமைச்சு

by Bella Dalima 05-11-2021 | 11:34 AM
Colombo (News 1st) சந்தையில் நிலவும் கேள்வி மற்றும் விநியோகத்திற்கு அமைவாக அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் தீர்மானிக்கப்படுமென நிதியமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், அசாதாரணமான முறையில் பொருட்களின் விலைகளை உயர்த்துவதற்கான எவ்வித சந்தர்ப்பமும் வியாபாரிகளுக்கு வழங்கப்படமாட்டாதென நிதியமைச்சின் செயலாளர் S.R. ஆட்டிகல தெரிவித்தார். இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையூடாக தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென அவர் கூறினார். சந்தையில் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் S.R. ஆட்டிகல தெரிவித்தார். சீனி, பருப்பு, கோழி இறைச்சி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பலவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்கி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவரது கையொப்பத்துடன் குறித்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டது. இதற்கமைய, நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இதற்கு முன்னர் வௌியிடப்பட்ட 07 வர்த்தமானி அறிவித்தல்கள், புதிய வர்த்தமானி அறிவித்தல் ஊடாக செல்லுபடியற்றதாக்கப்பட்டது.