பசிலுக்கு எதிரான வழக்கு: சட்ட மா அதிபரின் தீர்மானம் நவம்பர் 11 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது

by Bella Dalima 05-11-2021 | 9:33 PM
Colombo (News 1st) நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இன்று மேல் நீதிமன்றத்தில் ஆஜரானார். 2015 ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் 2 கோடியே 94 இலட்சம் ரூபா செலவில் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸவின் நிழற்படம் பொறிக்கப்பட்ட 50 இலட்சம் கையேடுகளை அச்சிட்டு பகிர்ந்தளித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் ஆஜராவதற்காக அவர் வருகை தந்திருந்தார். பசில் ராஜபக்ஸ மற்றும் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக சட்ட மா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதா, இல்லையா என்பது தொடர்பான சட்ட மா அதிபரின் நிலைப்பாடு எதிர்வரும் 11 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படும் என சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று பிரதிவாதிகள் இருவருக்கும் குற்றப்பத்திரிகை வாசித்துக் காண்பிக்கப்பட்டதுடன், அவர்கள் தவறிழைக்கவில்லை என தெரிவித்தமையினால் வழக்கின் சாட்சி விசாரணை ஆரம்பமானது. வழக்கின் ஆறாவது சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ள, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் கட்டுப்பாட்டு பணிப்பாளராக செயற்பட்டவர், பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வாவின் வழிகாட்டலில் நீதிமன்றத்தில் சாட்சியம் வழங்கினார். பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுடன் அவர்களுக்கு எவ்வித தொடர்புமில்லையென பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்திர பெர்னாண்டோ ஆகியோர் தெரிவித்தனர். எனவே, குற்றப்பத்திரத்தை வாபஸ் பெறுமாறும் சட்ட மா அதிபர் முன்னிலையில் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்ததாக ஜனாதிபதி சட்டத்தரணிகள் மன்றுக்கு அறிவித்தனர். இன்று திறந்த மன்றில் நடைபெற்ற சாட்சி விசாரணை தொடர்பில் சட்டமா அதிபரை தௌிவுபடுத்தி, அவரின் நிலைப்பாட்டை அடுத்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்திற்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்