இலங்கை தொடர்பான அமெரிக்காவின் அறிக்கைக்கு சீனா பதில்

இலங்கை தொடர்பான அமெரிக்காவின் அறிக்கைக்கு சீனா பதில்

எழுத்தாளர் Bella Dalima

05 Nov, 2021 | 8:06 pm

Colombo (News 1st) பொருளாதாரத்தை போலவே போர் வலிமை தொடர்பாக சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் விவாதத்திற்குரிய நிலைமை தற்போது காணப்படுகின்றது.

வெளிப்படையாக காண முடியாத இந்த நிலைமை இரண்டாவது பனிப்போரின் ஆரம்ப கட்டமா எனும் கேள்வி எழும்புகின்றது.

தென் சீன கடல் மற்றும் தாய்வானை பிரதான தளமாகக் கொண்டு அமெரிக்க இராஜதந்திர நிலைப்பாடுகளை கடந்த நாட்களில் பகிரங்கமாக காண முடிந்தது.

இவ்வாறான சூழலில் சீன இராணுவம் இலங்கையில் இராணுவத்திற்கு வசதிகளை அளிக்கும் நிலையத்தை திறக்க தயாராவதாக பென்டகன் புதிய அறிக்கையை வெளியிட்டு தமது குற்றச்சாட்டை முன்வைத்தது.

அமெரிக்காவின் அறிக்கைக்கு சீனா இன்று பதிலளித்துள்ளது.

சீனாவில் இராணுவ மற்றும் பாதுகாப்பு அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அண்மையில் அறிக்கையொன்றை வெளியிட்டது.

சீனா தமது இராணுவ பலத்தை வியாபிக்கும் நோக்குடன், இலங்கை உட்பட 13 நாடுகளில் தமது இராணுவத்திற்கு வசதிகள் ஏற்படுத்துவதற்கான நிலையங்களை ஸ்தாபிப்பதற்கான வாய்ப்புள்ளதாக பென்டகனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள இலங்கையிலுள்ள சீன தூதரகம், அனைவரும் திருடுகிறார்கள் என ஒரு திருடன்  நினைப்பதாக குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கா தற்போதைக்கு 750-க்கு மேற்பட்ட வெளிநாட்டு இராணுவ முகாம்களை ஸ்தாபித்துள்ளதை சீன தூதரகம் நினைவூட்டியுள்ளது.

2030 ஆம் ஆண்டளவில் சீனாவின் அணுவாயுத எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரித்துக்கொள்ள முடியும் என பென்டகன் வெளியிட்ட அறிக்கைக்கு சீன வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் பதிலளித்துள்ளார்.

சீனாவில் அணுவாயுத அச்சுறுத்தலை அதிரிக்கப்பதற்கு அமெரிக்கா இந்த அறிக்கை ஊடாக முயற்சித்துள்ளது. சீனாவுக்கு எதிராக அணுவாயுதங்களை பயன்படுத்தாத எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும் சீனா அணுவாயுத அச்சுறுத்தலை விடுக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, உணவு உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய பொருட்களை களஞ்சியப்படுத்திக் கொள்ளுமாறு சீன வர்த்தக அமைச்சு அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சீரற்ற வானிலை, வலுசக்தி தட்டுப்பாடு மற்றும் COVID-19 காரணமாக விநியோகங்களுக்கு தடங்கல் ஏற்பட்டதால் உருவாகக்கூடிய பிரச்சினைகளை குறைத்துக்கொள்வதற்காக இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதென சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்