இந்திய மீனவர் பிரச்சினைக்கு இராஜதந்திர நடவடிக்கை

இந்திய மீனவர் பிரச்சினைக்கு இராஜதந்திர நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக டக்ளஸ் தெரிவிப்பு

by Bella Dalima 05-11-2021 | 3:20 PM
Colombo (News 1st) இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பில் இராஜதந்திர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கடல் நீரேரிகளை ஆழப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சமாசத்தில் நேற்று (04) கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது, இந்திய மீனவர்கள் மற்றும் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சருக்கு தௌிவுபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன் நாயாறு, சாலை ஆகிய கடல் நீரேரிகளை விரைவில் ஆழப்படுத்தித் தருமாறு மீனவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். மீனவர்களின் கருத்துக்களை கேட்டறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பில் தாம் இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மீனவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, நந்திக்கடல், நாயாறு, சாலை ஆகிய கடல் நீரேரிகளையும் ஆழப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.