145 சேதன பசளை மாதிரிகளுக்கு இறக்குமதி அனுமதி

145 சேதன பசளை மாதிரிகளுக்கு இறக்குமதி அனுமதி

by Bella Dalima 04-11-2021 | 11:51 AM
Colombo (News 1st) 145 சேதன பசளை மாதிரிகளுக்கு மூன்று மாத இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. 16 நாடுகளில் இருந்து சேதன பசளையை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தாவரவியல் தடுப்புக் காப்புச்சேவை தெரிவித்துள்ளது. இதுவரையான காலப்பகுதியில் 19 சேதன பசளை மாதிரிகள் நாட்டிற்கு கிடைத்துள்ளன. இதில் ஏழு மாதிரிகளில் நுண்ணுயிர்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தாவரவியல் தடுப்புக் காப்புச்சேவையின் மேலதிக பணிப்பாளர் பேராசிரியர் துஷார விக்ரமாராச்சி தெரிவித்துள்ளார். இதேவேளை, சர்ச்சைக்குரிய சீன கப்பலில் கொண்டுவரப்படும் சேதன பசளையில் நுண்ணுயிர்கள் மூன்றாம் தரப்பினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உரிய தரத்திலுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த மாதிரியை மீண்டும் பரிசோதிக்கவுள்ளதாக தேசிய தாவரவியல் தடுப்புக் காப்புச்சேவை தெரிவித்துள்ளது. இந்த பரிசோதனையின் போது, குறித்த பசளை மாதிரி நாட்டிற்கு பொருத்தமற்றதென கண்டறியப்பட்டால், சர்ச்சைக்குரிய சீன கப்பலிலுள்ள பசளையை நாட்டுக்குள் அனுமதிப்பதற்கான சட்ட ரீதியிலான இயலுமை இல்லையென துஷார விக்ரமாராச்சி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், குறித்த கப்பல் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக உரிய தரப்பினர் தமக்கு அறிவிக்கவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, உரம் கோரி விவசாயிகள் முன்னெடுத்துள்ள போராட்டம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.