பண்டோர ஆவணம்: விசாரணை அறிக்கை கையளிக்கப்படவுள்ளது

பண்டோர ஆவணம்: திருக்குமார் நடேசன் தொடர்பான விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது

by Bella Dalima 04-11-2021 | 12:15 PM
Colombo (News 1st) பிரபல செல்வந்தர்களின் இரகசிய கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பண்டோரா ஆவணத்தில் வௌிக்கொணரப்பட்ட விடயங்கள் குறித்து முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஸவின் கணவரான வர்த்தகர் திருக்குமார் நடேசன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இடைக்கால அறிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான விசாரணை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் செயலாளர் அப்சரா கல்தேரா தெரிவித்தார். திருக்குமார் நடேசனின் வங்கி நடவடிக்கைகள் மற்றும் அரச நிறுவனங்களில் பெற்றுக்கொண்ட ஆவணங்கள் தொடர்பிலான மதிப்பீடுகள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டார். இதனிடையே, பண்டோரா பேப்பர்ஸ் ஆவணத்தில் வௌியாகிய விடயங்கள் தொடர்பில், சிறையிலுள்ள ரஞ்சன் ராமநாயக்கவிடம் வாக்குமூலமொன்றை பெறுவதற்கு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ரஞ்சன் ராமநாயக்க முன்வைத்த கோரிக்கைக்கு இணங்கவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய அவர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.