by Bella Dalima 04-11-2021 | 9:25 PM
Colombo (News 1st) இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இந்திய விவசாய உர கூட்டுறவு நிறுவனம் தயாரிக்கும் திரவ நைட்ரஜன் உரம் நனோ யூரியா எனும் பெயரில் இந்நாட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றது.
இந்த உரத்தை நாட்டிற்கு கொண்டுவருவதற்கு முன்பு அதன் தரத்தை பரிசோதித்தது யார்?
இலங்கைக்கு எந்தவொரு உரமும் கொண்டுவரப்படும் போது, அதன் தரத்தை அங்கீகரிக்கும் நிறுவனமாக இலங்கை உர செயலாளர் அலுவலகம் உள்ளது.
இந்த நனோ உரத்தின் தன்மை இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக உள்ளதா என Bureau Veritas எனப்படும் சர்வதேச தனியார் பரிசோதனை நிறுவனத்தினால் பரிசோதிக்கப்பட்டதாக இலங்கை உர செயலாளர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன் பிரகாரம், ஒரு கிலோகிராம் திரவ உரத்தில் 4.3 மில்லிகிராம் நைட்ரஜன் மற்றும் Chromium எனப்படும் கன உலோகம் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் தரத்திற்கு அமைவாக உள்ளதென அவர்கள் கூறினார்கள்.
எனினும், நனோ நைட்ரஜன் திரவ உரத்திற்காக தர அளவை இலங்கை தர நிர்ணய நிறுவனம் வெளியிடவில்லை என இலங்கை தர நிர்ணய நிறுவனத்திடம் வினவியபோது தெரிவிக்கப்பட்டது.
அது தொடர்பாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, தர நிர்ணய நிறுவனம் குழுவொன்றை நியமித்துள்ளது.
எனினும், அது தொடர்பில் உலகத்தில் தர அளவொன்று இல்லை என குறித்த குழு கடந்த 14 ஆம் திகதி கூடி ஆராய்ந்த போது தெரியவந்துள்ளது.