அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது இலங்கை

T20 உலகக்கிண்ணம்: அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது இலங்கை

by Bella Dalima 02-11-2021 | 6:20 AM
Colombo (News 1st) உலகக்கிண்ண T20 கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 26 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இங்கிலாந்தின் இந்த வெற்றியுடன் தொடரில் அரையிறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு இலங்கைக்கு அற்றுப்போனது. சார்ஜாவில் நேற்று (01) நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியின் அழைப்பிற்கிணங்க முதலில் இங்கிலாந்து துடுப்பெடுத்தாடியது. எனினும், 35 ஓட்டங்களுக்குள் இங்கிலாந்து அணியின் முதல் 3 விக்கெட்களும் வீழ்த்தப்பட்டன. ஜேசன் ​ரோய் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, டேவிட் மலன் 6 ஓட்டங்களுடனும் ஜொன்னி பெயார்ஸ்டோவ் ஓட்டமேதுமின்றியும் ஆட்டமிழந்தனர். எவ்வாறாயினும், ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜோஸ் பட்லர் இறுதி வரை ஆட்டமிழக்காது களத்தில் நின்றார். ஜோஸ் பட்லர் 67 பந்துகளில் 101 ஓட்டங்களைக் குவித்தார். இதில் 6 சிக்ஸர்களும் 6 பௌண்டரிகளும் அடங்குகின்றன. 20 ஆவது ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்ததன் மூலம், பட்லர் சதம் அடித்ததுடன், இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் சதமடித்த இரண்டாவது வீரராகவும் பதிவானார். அணித்தலைவர் இயன்மோர்கன் 40 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்களை கைப்பற்றினார். இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பத்தில் சற்று தடுமாறியது. பெதும் நிஸ்ஸங்க மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கினர். பெதும் நிஸ்ஸங்க ஓர் ஓட்டத்துடன் வௌிளேயறினார். இலங்கை அணி 76 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்களை இழந்தது. வனிந்து ஹசரங்க அணி சார்பில் அதிகபட்சமாக 34 ஓட்டங்களைக் குவித்தார். இலங்கை அணியின் இறுதி 3 விக்கெட்களும் 7 ஓட்டங்களுக்குள் தகர்க்கப்பட்டன. மொயின் அலி, ஆதில் ரஷிட் மற்றும் கிரிஸ் ஜோர்தன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். 164 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 137 ஓட்டங்களை மாத்திரமே குவித்தது. போட்டியின் ஆட்டநாயகனாக ஜோஸ் பட்லர் தெரிவானார். இந்த வெற்றியுடன் இங்கிலாந்து 4 போட்டிகளிலும் வெற்றியீட்டி 8 புள்ளிகளுடன் A குழுவில் முதலிடத்தில் நீடிக்கிறது.