எரிசக்தி ஒப்பந்தத்தில் இணை தலைமை வகிப்பதில் பெருமை

பூகோள எரிசக்தி ஒப்பந்தத்தில் இலங்கை இணை தலைமை வகிப்பதில் பெருமையடைவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

by Bella Dalima 02-11-2021 | 12:07 PM
Colombo (News 1st) புதிய நிலக்கரி சக்தியை அகற்றுவதற்கான பூகோள எரிசக்தி ஒப்பந்தத்தில் இலங்கை இணை தலைமை வகிப்பதில் தாம் பெருமையடைவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஸ்கொட்லாந்தில் நேற்று (01) ஆரம்பமான “COP: 26 ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை மாற்றம்” தொடர்பான மாநாட்டில் ஜனாதிபதி உரை நிகழ்த்திய போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். பொது சுகாதார பிரச்சினைகள், நீர் மாசுபாடு, சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக இரசாயன உரங்கள், கிருமிநாசினிகள் மற்றும் களைநாசினிகளின் இறக்குமதியை இலங்கை அண்மையில் கட்டுப்படுத்தியுள்ளதாக மாநாட்டில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாடு எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி வரை ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறவுள்ளது. “காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தின் தீர்மானமிக்க சந்தர்ப்பங்கள்” என்ற தொனிப்பொருளில் இம்மாநாடு நடைபெறுகின்றது. 197 நாடுகளின் அரச தலைவர்கள், அரச பிரதிநிதிகள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25,000 பேர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர். இதில் அரச தலைவர்கள் பலர் உரை நிகழ்த்தியதுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவும் உரையாற்றியிருந்தார். இலங்கையில் இரசாயன உரக்கட்டுப்பாடு அமுலிலுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இரசாயன உரங்களை கோரி, எதிர்ப்புகள் வலுப்பெற்றுள்ள போதிலும், சேதன பசளைக்கான முதலீடாக இது அமைந்துள்ளதெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்