சந்தையில் சமையல் எரிவாயு, சீமெந்து தட்டுப்பாடு வலுவடைந்தது

by Bella Dalima 02-11-2021 | 9:11 PM
Colombo (News 1st) சந்தையில் சமையல் எரிவாயு மற்றும் சீமெந்திற்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. சமையல் எரிவாயு மற்றும் சீமெந்தின் விலையை அதிகரிப்பதற்கு அண்மையில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டாலும் சந்தையில் அந்த பொருட்களை போதுமானளவு பெற்றுக்கொள்ள முடியவில்லை. சீமெந்து பற்றாக்குறையினால் நிர்மாணத்துறையை சேர்ந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சீமெந்து உற்பத்திகளை மேற்கொள்வோரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. கடன் கடிதங்கள் விநியோகிக்கப்படாமையினால், சமையல் எரிவாயு விநியோகத்தை வழமைக்கு கொண்டுவர முடியாமல் இருப்பதாக லாஃப் கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் விநியோகமும் தற்போது குறைந்த மட்டத்திலேயே இடம்பெறுகிறது. சமையல் எரிவாயு இல்லாமையினால் மாற்று முறைகளை தற்போது மக்கள் நாடுகின்றனர். இதனிடையே ஒருகொடவத்தை, மாவனெல்ல, கம்பளை பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர்.