ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான சர்வதேச தினம் இன்று

by Bella Dalima 02-11-2021 | 10:26 PM
Colombo (News 1st) ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் அந்த வன்முறைக் குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் சுதந்திரமாக நடமாடுவதை முடிவிற்கு கொண்டு வருவதற்கான சர்வதேச தினம் (International Day to End Impunity for Crimes Against Journalists) இன்றாகும். ஊடகவியலாளர் அனைத்து பிரஜைகளுக்காகவும் உண்மையைக் கண்டறிந்து அவற்றை வௌிக்கொணரும் தீர்மானமிக்க செயற்பாட்டாளராவர். ஊடகவியலாளர்கள் தொடர்பில் பல்வேறு நிலைப்பாடுகள் இருக்கலாம். சரியான ஊடகவியலாளர்கள் தொடர்பில் விமர்சனங்கள் இருக்கலாம். ஒரு சிலருக்கு அருவருப்பாக இருந்தாலும், சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டாலும் அவை அனைத்தையும் தாங்கிக்கொண்டு உண்மைக்காக ஊடகவியலாளர் முன்நிற்கின்றார். சவால்களுக்கு மத்தியில் உண்மையை பின்தொடர்ந்து சென்று மக்களுக்காக தகவல்களை வௌிப்படுத்தும் ஊடகவியலாளர் உங்களது தகவல் அறியும் உரிமையையும் உண்மையை அறிவதற்கான உரிமையையும் உறுதிப்படுத்துகிறார். அனைத்து பிரஜைகளுக்காகவும் அபாயத்தை ஏற்கும் பொதுவான பிரஜை ஊடகவியலாளராவார். ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக உலகத்தின் கவனம் திரும்புகின்ற இன்றைய நாளில், இலங்கையில் மௌனிக்கச் செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் தொடர்பில் நினைவுபடுத்த வேண்டியுள்ளது. ? 2009 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை- கொலையாளிகள் இன்றும் சுதந்திரமாக நடமாடுகின்றனர். ? 2008 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி நேஷன் பத்திரிகை ஆசிரியர் கீத் நொயாரை கடத்திச்சென்று தாக்கிய குற்றவாளிகளுக்கு என்ன நடந்தது? ? 2010 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போனார்- மர்மம் இன்றும் நீடிக்கின்றது. ? 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஊடகவியலாளர் தராக்கி சிவராம் படுகொலை செய்யப்பட்டார் ? 2010 ஜனவரி 6 ஆம் திகதி தெபானம சிரச கலையகம் மீது குண்டர் தாக்குதல் இடம்பெற்றது ? 2010 மார்ச் 22 ஆம் திகதி சிரச ஊடக வலையமைப்பின் தலைமையகம் மீது தாக்குதல் - ஊழியர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டது ? 2009 மார்ச் 25 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள உதயன் பத்திரிகை அலுவலகம் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது ? 2013 ஆம் ஆண்டு மீண்டும் உதயன் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது ? 2010 ஆம் ஆண்டு சியத்த ஊடக நிறுவனம் மீது தாக்குதல் - விசாரணைகளுக்கு நடந்தது என்ன? மிலேச்சத்தனமான தாக்குதல்களின் சிலவற்றை மாத்திரமே இங்கு வரிசைப்படுத்தியுள்ளோம். இந்த தாக்குதல்களின் இலக்கு வெறுமனே ஊடகவியலாளர்கள் அல்லது ஊடக நிறுவனங்கள் அல்ல. இந்த அனைத்து தாக்குதல்களும் பொதுமக்களை இலக்காகக் கொண்டே நடத்தப்பட்டது. மக்களின் தகவல் அறியும் உரிமைக்கு எதிராகவே கட்டவிழ்த்து விடப்பட்டது. இன்றைய நாளில் ஒரு விடயத்தை மாத்திரம் நினைவிற்கொள்ளுங்கள். உண்மை ஏதேனும் ஒரு நாளில் வெற்றிபெறும். உண்மையை மூழ்கடிக்க முடியாது.