முதன்முறையாக பொதுவௌியில் தோன்றிய தலிபான் தலைவர்

முதன்முறையாக பொதுவௌியில் தோன்றிய தலிபான் தலைவர்

by Bella Dalima 01-11-2021 | 4:58 PM
Colombo (News 1st) முதல் முறையாக தலிபான் தலைவர் ஹைபதுல்லா அகுந்த்சாதா (Haibatullah Akhundzada) பொதுவெளியில் தோன்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹைபத்துல்லா அகுந்த்சாதா அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக பலமுறை வதந்திகள் பரவியிருந்த நிலையில், அவர் பொதுவௌியில் தோன்றியுள்ளார். தலிபான் பயங்கரவாத அமைப்பை நிறுவியவரான முல்லா உமரின் மரணத்திற்கு பிறகு 2016 ஆம் ஆண்டு முதல் அந்த அமைப்பின் உச்ச அதிகாரம் படைத்த தலைவராக இருந்து வருபவர் ஹைபதுல்லா அகுந்த்சாதா. இவர் அந்த அமைப்பின் ஆன்மீக தலைவராகவும் உள்ளார். ஆனால் இவர் ஒருபோதும் பொதுவெளியில் தோன்றியது கிடையாது. எங்கு இருக்கிறார், எப்படி இருக்கிறார் என்பது மர்மமாகவே இருந்து வந்தது. கடந்த ஆகஸ்டு மாதம் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பிறகு கூட ஹைபதுல்லா அகுந்த்சாதா வெளியில் தலைகாட்டவில்லை. தலிபான்கள் தலைமையில் அமையும் புதிய அரசியல், மதம் மற்றும் இராணுவ விவகாரங்கள் மீதான இறுதி முடிவை எடுக்கும் உச்ச அதிகாரம் படைத்த தலைவராக ஹைபதுல்லா அகுந்த்சாதா இருப்பார் என தலிபான் பயங்கரவாத அமைப்பு அறிவித்தது. முன்னதாக ஹைபதுல்லா அகுந்த்சாதா அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக பலமுறை வதந்திகள் பரவின. அண்மையில் கூட தலிபான்களுக்குள் ஏற்பட்ட உள்மோதலில் அவர் பலியானதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், இந்த வதந்திகளை பொய்யாக்கும் வகையில், முதல் முறையாக தலிபான் தலைவர் ஹைபதுல்லா அகுந்த்சாதா பொதுவெளியில் தோன்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. கந்தகார் மாகாணத்தில் உள்ள ஒரு மதரசா பாடசாலைக்கு சென்று, அங்கு தனது ஆதரவாளர்கள் மத்தியில் அவர் உரையாற்றியதாக தலிபான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹைபதுல்லா அகுந்த்சாதா வருகையையொட்டி அந்த இடத்தில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகவும், வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.