by Staff Writer 01-11-2021 | 6:05 PM
Colombo (News 1st) 'ஒரே நாடு - ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் இலக்குகளை அடைவதற்கு, அதன் உறுப்பினர்களுடன் இணைந்து அயராது உழைக்க உறுதிபூண்டுள்ளதாக செயணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
ஓர் அடிப்படை கொள்கைக் கட்டமைப்பிற்குள் இருந்து அந்த பாத்திரத்தை நிறைவேற்றுவதோடு, எந்தவொரு குடிமகனும் இனம், மதம், ஜாதி அல்லது வேறு ஏதேனும் காரணிகளின் அடிப்படையில் சட்ட வேறுபாடுகளுக்கு உள்ளாகக் கூடாதென அவர் கூறியுள்ளார்.
ஒரே நாடு - ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் செயற்பாடுகள் குறித்து ஊடகங்களுக்கு முதன்முறையாக தௌிவுபடுத்தும் காணொளியூடான ஊடக சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது.
ஜனாதிபதி ஊடக அமையத்தில் இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது.
நாட்டை முதன்மைப்படுத்தி செயற்படுவதாயின், அனைத்து கருத்துகளையும் செவிமடுக்க செயலணி தயாராகவுள்ளதாக கலகொட அத்தே ஞானசார தேரர் கூறியுள்ளார்.
அத்துடன், இந்த பிரச்சினைகள் தொடர்பான பரந்துபட்ட தௌிவும் ஆழ்ந்த ஆய்வும் தமது செயலணிக்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிற்கு ஏற்ற ஒரு சட்டத்தையும் நாட்டின் எதிர்கால சந்ததியை அடுத்த நூற்றாண்டிலும் அதற்கு அப்பாலும் ஒரு கொடியின் கீழ் பொருத்தக்கூடிய ஒரு தேசத்தை உருவாக்குவதே தமது பொறுப்பாக உள்ளதாகவும் தேரர் கூறியுள்ளார்.
இனம், மதம் மற்றும் மாகாண அடிப்படையிலான பிளவுகள் காரணமாக நாட்டின் இளையோர் சமுதாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரர், பல்கலைக்கழகம், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த அனைத்து இளைஞர் யுவதிகளும், தமது யோசனைகள் மற்றும் ஆலோசனைகளை செயலணிக்கு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
அது மாத்திரமன்றி, நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், மத மற்றும் சிவில் அமைப்புகளுடனும் தமது கருத்துகளை பகிர எதிர்பார்த்துள்ளதாக தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த அனைத்து கருத்துக்கணிப்புகளுக்குப் பின்னர், செயலணியின் கருத்துகளும் பரிந்துரைகளும் உரிய காலத்திற்குள் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்படுமென தேரர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஒரே நாடு - ஒரே சட்டம் என்பதை செயற்படுத்துவதற்கான சட்டமூலமொன்றை தயாரிக்க மாத்திரமே ஜனாதிபதி செயலணிக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதன் உறுப்பினர் சுமேத சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், சட்டத்தை இயற்றுவதற்கான அதிகாரம் இந்த செயலணிக்கு வழங்கப்படவில்லை எனவும் அது அரசியலமைப்பு சபையினால் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.