பொலிஸ் சார்ஜன்ட் சுப்பையா இளங்கோவனின் பூதவுடல் உறவினர்களிடம் கையளிப்பு

பொலிஸ் சார்ஜன்ட் சுப்பையா இளங்கோவனின் பூதவுடல் உறவினர்களிடம் கையளிப்பு

எழுத்தாளர் Staff Writer

01 Nov, 2021 | 8:39 pm

Colombo (News 1st) கம்பளை வைத்தியசாலையில் இருந்து காணாமற்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் சுப்பையா இளங்கோவனின் பூதவுடல் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

கடந்த மாதம் 8 ஆம் திகதி காணாமற்போன இவர் கடந்த 29 ஆம் திகதி கம்பளை வைத்தியசாலையில் உள்ள நீர்த்தாங்கியொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

பொலிஸ் சார்ஜன்ட் சுப்பையா இளங்கோவனின் சடலம் மீதான பிரேத பரிசோதனை கண்டி போதனா வைத்தியசாலையில் இன்று நடைபெற்றது.

இதன்போது, உடற்பாகங்கள் சிலவற்றை இரசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இரசாயன பகுப்பாய்வின் பின்னர் கிடைக்கும் அறிக்கைக்கு அமைவாகவே மேலதிக விடயங்கள் தெரியவரும் என பொலிஸார் கூறினர்.

பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்ட விடயங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பூதவுடல் சீல் வைக்கப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

இதற்கமைய, பொலிஸ் சார்ஜன்ட் இளங்கோவனின் மரணத்திற்கான காரணம் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.

கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி சுப்பையா இளங்கோவன் காணாமற்போயிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், கம்பளை போதனா வைத்தியசாலையில் 40 அடி உயரமான நீர்த்தாங்கியிலிருந்து கடந்த 29 ஆம் திகதி சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்