கொத்மலை பொலிஸ் சார்ஜனின் பிரேத பரிசோதனை ஒத்திவைப்பு

by Staff Writer 31-10-2021 | 8:33 PM
Colombo (News 1st) கம்பளை போதனா வைத்தியசாலையின் நீர் தாங்கியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் சார்ஜனின் பிரேத பரிசோதனை நாளைய தினம் (01) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு பொலிஸ் சார்ஜன்ட் சுப்பையா இளங்கோவனின் உடல் இன்று (31) கையளிக்கப்படும் என அவரது உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், கண்டி போதனா வைத்தியசாலையின் பிரதான சட்ட வைத்திய அதிகாரி வேறு கடமைகளின் நிமித்தம் சென்றுள்ளமையால் இன்று பிரேத பரிசோதனை இடம்பெறவில்லை என கம்பளை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த பொலிஸ் சார்ஜனின் உடல் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் இதன்போது தொற்று உறுதி செய்யப்படவில்லை. பிரேத பரிசோதனை நிறைவுபெறும் வரை மரணத்திற்கான காரணத்தை உறுதியாக கூற முடியாது என பொலிஸார் கூறுகின்றனர். கம்பளை போதனா வைத்தியசாலையில் 40 அடி உயரமான நீர் தாங்கிக்கு ஒருவரை தூக்கி செல்வது சாத்தியமற்றது என பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் சடலத்தைப் பெற்றுக்கொள்ள சுப்பையா இளங்கோவனின் குடும்பத்தினர் இன்று கண்டி வைத்தியசாலைக்கு சென்றிருந்தனர். இதற்கமைய பொலிஸ் சார்ஜன்ட் சுப்பையா இளங்கோவனின் சடலம் தொடர்ந்தும் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் பிரதான சட்ட வைத்திய நிபுணர் எம். சுப்ரமணியம் நியூஸ்பெஸ்ட்டுக்கு உறுதிப்படுத்தினார். கம்பளை வைத்தியசாலையில் சடலம் மீட்கப்பட்ட பிரதான நீர் தாங்கியை சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கம்பளை வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் நேற்று (30) தெரிவித்திருந்தார். எனினும், குறித்த நீரை பயன்படுத்தியதால் எவ்வித பாதிப்புகளும் இதுவரை பதிவாகவில்லை என கம்பளை வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் தெரிவித்தார்.