மக்கள் மனங்களை வென்ற மக்கள் வங்கி...

by Staff Writer 30-10-2021 | 8:43 PM
Colombo (News 1st) சீன தூதுவராலயம் கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கிய மக்கள் வங்கி நாட்டு மக்களின் மனங்களை வென்ற நன்மதிப்புமிக்க வங்கியாகும். அத்தகைய நன்மதிப்புமிக்க வங்கி இவ்வாறு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டமை குறித்து தெளிவுபடுத்த வேண்டியது முக்கியமாகும். 1961 ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் வங்கி, இந்நாட்டு நிதித் துறைக்கும் சமூக வளர்ச்சிக்கும் அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. வங்கி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் நாட்டு மக்களின் உள்ளக்கிடக்கைகளை அறிந்து சகல துறைகளினதும் நிதித் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக செயற்பட்டுள்ளது. 1967 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட கைமாறு கடன் திட்டம் சாதாரண மக்களுக்கானதாகும். 1983 ஆம் ஆண்டு கலவரத்தின் போது ஏற்பட்ட இடர்பாடுகளிலிருந்து மக்கள் மீண்டெழுவதற்கு மக்கள் வங்கி கரங்கொடுத்து உதவியுள்ளது. சாதாரண மக்களை அரவணைத்துக்கொண்ட வங்கியாக மக்களின் சேமிப்புகளை பாதுகாத்தது. தற்காலத்தில் நமது நாட்டில் ஏற்றுமதி, இறக்குமதித் துறையில் நிதி உதவி வழங்கும் பிரதான வங்கியாக மக்கள் வங்கி பாரியதொரு சேவையை ஆற்றி வருகின்றது. கடந்த காலத்தில் பாரிய தனியார் பிரிவு அடிப்படை வசதிகளுடனான அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றில் பிரதான நிதிப் பங்காளராக மக்கள் வங்கி உள்ளது. கொவிட் 19 தொற்று காலத்தில் இந்த வங்கி நமது தேசத்திற்கு பாரிய உதவியை வழங்கியது. கொவிட் நெருக்கடியின் போது 2020 ஆம் ஆண்டில் உலகத்திலுள்ள உயர்ந்த ஆயிரம் வங்கிகளுக்குள் மக்கள் வங்கி தெரிவாகியமை அதன் முகாமைத்துவம் மற்றும் ஊழியர்கள் குழுவின் பங்களிப்புக்கு கிடைத்த சிறந்த சான்றாகும். ஆசியாவிலுள்ள 400 பாரிய வங்கிகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டமை இலங்கையின் சர்வதேச வர்த்தக சபை மற்றும் இலங்கையின் அதிகாரம் பெற்ற முகாமைத்துவ நிறுவனங்களால் இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் இலங்கையில் மிகவும் பாராட்டத்தக்க நிறுவனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டமை என்பன மக்கள் வங்கி அண்மைக் காலத்தில் பெற்ற அழிக்க முடியாத வெற்றிகளாகும். சாதாரண மக்களை அரவணைத்துக்கொண்டு இன்றும் அதிசிறந்த நிதி வலுவூட்டலுள்ள இத்தகைய தேசிய வங்கி சீனாவின் கறுப்புப் பட்டியலுக்குள் எவ்வாறு வீழ்ந்தது? நாட்டின் பெரு மதிப்புக்குரிய வங்கியின் நன்மதிப்பை பாதிக்கச் செய்த சர்வதேச சக்திகளுக்கு எதிராக சம்பந்தப்பட்ட தரப்புகளால் செயற்பட முடியாதுள்ளமை நாட்டினதும் மக்களினதும் துரதிர்ஷ்டவசமாகும். குறிப்பாக எமது நாட்டு சட்டத்தின் பிரகாரம் நீதிமன்ற ஆணையை பின்பற்றியதன் காரணமாக மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் சீன தூதுவராலயம் இணைத்துள்ளமையானது மக்கள் வங்கிக்கு மாத்திரமின்றி நாட்டு மக்களுக்கும் அவப்பெயரல்லவா? சீனா அவ்வாறு செய்தாலும் பாதிப்புக்குரிய பக்டீரியாக்கள் அடங்கிய உரத்தை கொண்டுவந்த சீன நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் இணைக்க நமது நாட்டு தரப்பினால் இன்னும் இயலவில்லை. பாதிப்புக்குறிய பக்டீரியாக்கள் அடங்கிய உரத்துடனான கப்பல் தொடர்ந்தும் நமது நாட்டை அண்மித்து நிற்கின்றது. அவ்வாறிருக்கையில் சாதாரண மக்களினதும் வர்த்தக சமூகத்தினதும் நம்பிக்கையை வென்ற எமது நாட்டு நிதித் துறையின் இதயமாகவுள்ள மக்கள் வங்கிக்கு வெளிநாட்டவர்கள் ஏற்படுத்திய அகௌரவம், நாட்டு மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தும் ஒன்றல்லவா?