இந்திய மீனவர்களை சிறைக்கு மாற்ற நீதிமன்றம் அனுமதி

தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 23 பேரையும் சிறைச்சாலைக்கு மாற்ற நீதிமன்றம் அனுமதி

by Staff Writer 30-10-2021 | 10:57 AM
Colombo (News 1st) வடக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு காரைநகர் கடற்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 23 பேரையும் சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு பருத்தித்துறை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடற்றொழில் திணைக்களத்தினூடாக இன்று (29) சமர்ப்பிக்கப்பட்ட நகர்த்தல் பத்திரத்திற்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார். அதற்கமைய, விளக்கமறியல் காலம் முடிவடையும் வரை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மீனவர்கள் 23 பேரையும் தடுத்து வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதேவேளை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 23 மீனவர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பதிவு செய்வதற்கும் கடற்றொழில் திணைக்களத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனிடையே, இந்திய மீனவர்களை தூதரக அதிகாரிகள் சந்திப்பதற்கும் அவர்களுக்கான உடைகளை வழங்கவும் தூதரகத்தின் அனுசரணையுடன் தாயகத்தில் உள்ள உறவினர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள அனுமதி வழங்குமாறு விண்ணப்பம் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பான விபரங்களை எதிர்வரும் முதலாம் திகதி மன்றில் சமர்ப்பிற்குமாறு பருத்தித்துறை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். வடக்கு கடல் பரப்பில் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 23 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் உத்தரவு எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டு நேற்று உத்தரவிடப்பட்டது. இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் இவர்கள் கடந்த 13 ஆம் திகதி இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். பருத்தித்துறை, பலாலி கடற்பரப்புகளில் 02 படகுகளுடன் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.