வந்தாறுமூலை நீர்முக பிள்ளையார் ஆலய நிர்வாகம் எதிர்ப்பு: காணியிலிருந்து வௌியேறிய தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள்

by Staff Writer 29-10-2021 | 8:36 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலயத்திற்குச் சொந்தமான காணியில் தொல்பொருள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவிருந்த அடையாளப்படுத்தும் நடவடிக்கை ஆலய நிர்வாகத்தின் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்டது. மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவின் வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலயத்திற்குச் சொந்தமான 16 ஏக்கர் வயற்காணி பேரம் பகுதியில் அமைந்துள்ளதாக ஆலய நிர்வாகம் கூறுகின்றது. அந்தப் பகுதியில் தொல்பொருள் சின்னங்கள் இருப்பதாகத் தெரிவித்து, மட்டக்களப்பு தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள் இன்று (29) அடையாளப்படுத்துவதற்காகச் சென்றனர். இந்த நடவடிக்கைக்கு ஆலய நிர்வாகத்தினரும் விவசாயிகளும் இணைந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள் அங்கிருந்து வௌியேறினர். வந்தாறுமூலை ஶ்ரீ மகா விஷ்ணு ஆலயம், வந்தாறுமூலை கண்ணகி ஆலயம், வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றின் நிர்வாகத்தின் கீழ், 16 ஏக்கர் வயல் காணி வருடாந்தம் விவசாயிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டு வருகின்றது.