மூதூரில் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் 450 ஏக்கர் காணி விடுவிப்பு

by Staff Writer 29-10-2021 | 8:45 PM
Colombo (News 1st) திருகோணமலை - மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் இறால்குழி பகுதியிலுள்ள சுமார் 450 ஏக்கர் காணி வனஜீவராசிகள் திணைக்களத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 250 ஏக்கர் காணியை பொதுமக்களுக்கு விவசாயம் செய்வதற்காக வழங்கும் நிகழ்வும் நெல் விதைப்பு விழாவும் மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாரக் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரல, மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ஷன பாண்டி கோரல உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 40 ஆண்டுகளுக்கு முன்னர் குறித்த பிரதேசத்திலுள்ள விவசாயிகளால் விவசாயம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் குறித்த காணி, யுத்த காலத்தில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 10 ஆண்டுகள் கடந்த நிலையில் இறால்குழியில் வாழும் மக்கள் தமது காணிகளை விவசாயத்தின் பொருட்டு விடுவிக்குமாறு கோரியமைக்கு அமைய முதற்கட்டத்தின் கீழ் 250 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் மேலும் 200 ஏக்கர் காணி விவசாயம் மேற்கொள்வதற்காக விடுவிக்கப்படவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.