இலங்கைக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி

இலங்கைக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி

by Staff Writer 29-10-2021 | 7:01 AM
Colombo (News 1st) உலகக்கிண்ண T20 தொடரில் இலங்கை அணிக்கெதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட்களால் வெற்றியீட்டியது. துபாயில் நேற்றிரவு (28) இந்த போட்டி நடைபெற்றது. உலகக்கிண்ண T20 தொடரின் நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய அவுஸ்திரேலிய அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதனடிப்படையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களை பெற்றது. குசல் பெரேரா மற்றும் சரித் அசலங்க ஆகியோர் தலா 35 ஓட்டங்களை பெற்றனர். பானுக்க ராஜபக்ஸ 26 பந்துகளில் 33 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காதிருந்தார். பந்துவீச்சில் மிட்ச்சல் ஸ்டார்க், பெட் கம்மின்ஸ் மற்றும் அடம் ஸம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். 155 ஒட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 17 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்து 65 ஓட்டங்களை குவித்தார். அணித்தலைவர் எரொன் பின்ச் 37 ஓட்டங்களையும் பெற்றார்.