சூடான் பிரதமர் அப்துல்லா ஹம்டோ சிறை பிடிப்பு

சூடான் பிரதமர் அப்துல்லா ஹம்டோ சிறை பிடிப்பு; ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி

by Bella Dalima 26-10-2021 | 10:19 PM
Colombo (News 1st) சூடானில் இராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளதால், அங்கு இணையத்தள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வட ஆப்பிரிக்க நாடான சூடானில் 1989 முதல் 2019 வரை ஒமர் அல்-பஷீர் அதிபராக செயற்பட்டார். அதன்பின், மக்கள் போராட்டம் மற்றும் இராணுவ கிளர்ச்சியை அடுத்து ஒமர் அல்-பஷீர் சூடான் அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் இராணுவம் கலந்த கூட்டணி அரசு சூடானில் ஆட்சியமைத்தது. இந்த ஆட்சியில் அப்துல்லா ஹம்டோ சூடான் பிரதமராக செயற்பட்டு வருகிறார். இந்நிலையில், சூடானில் கூட்டணி ஆட்சிக்கு எதிராக இராணுவத்தினர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை இராணுவத்தினர் சிறைப்பிடித்துள்ளனர். மேலும், ஆட்சிக் கவிழ்ப்பிற்கு ஒத்துழைப்பு அளிக்காததால், பிரதமர் அப்துல்லா ஹம்டோவையும் இராணுவத்தினர் சிறைப்பிடித்துள்ளனர். இந்த நடவடிக்கைகளால் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். மேலும், தலைநகர் ஹர்டோமுக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.