பல்கலைக்கழகங்களை கட்டம் கட்டமாக திறக்க நடவடிக்கை

பல்கலைக்கழகங்களை கட்டம் கட்டமாக திறக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

26 Oct, 2021 | 11:25 am

Colombo (News 1st) பல்கலைக்கழகங்களை கட்டம் கட்டமாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

பரீட்சைகள் மற்றும் செயன்முறை பரீட்சைக்கு பயிற்சி பெறுவோருக்கு முன்னுரிமை வழங்கி, முதற்கட்டத்தில் பல்கலைக்கழக கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என அவர் கூறினார்.

உபவேந்தர்கள், தொற்றுநோய் தடுப்பு பிரிவினர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது பல்கலைக்கழகங்களை திறப்பது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதா பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக கற்பித்தல் நடவடிக்கைகளை சுகாதார ஒழுங்கு விதிகளுக்கு அமைய ஆரம்பிப்பதற்கான பொறுப்பை உபவேந்தர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க சுட்டிக்காட்டினார்.

இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொண்ட மற்றும் இரண்டாவது தடுப்பூசியை ஏற்றி இரண்டு வாரங்கள் நிறைவடைந்துள்ள மாணவர்களை மாத்திரம் பல்கலைக்கழகங்களுக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதுவரை 90 வீதமான மாணவர்கள் COVID தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத மாணவர்களுக்கு அடுத்த வாரம் தொடக்கம் பல்கலைக்கழகங்களில் மீண்டும் தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கையை முன்னெடுக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு அமைய, எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்