சீன சேதனப் பசளையை மீளாய்விற்கு உட்படுத்த இணக்கம் காணப்பட்டுள்ளது: சஷீந்திர ராஜபக்ஸ

சீன சேதனப் பசளையை மீளாய்விற்கு உட்படுத்த இணக்கம் காணப்பட்டுள்ளது: சஷீந்திர ராஜபக்ஸ

எழுத்தாளர் Staff Writer

26 Oct, 2021 | 1:17 pm

Colombo (News 1st) சீன நிறுவனத்தின் சேதனப் பசளையை இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் நிறுவனமொன்றுக்கு அனுப்பி மீள ஆய்விற்கு உட்படுத்த இணக்கம் காணப்பட்டுள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஸ கொழும்பில் இன்று (26) நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள ஆய்வுக்கூடங்களில் முன்னெடுக்கப்படும் ஆய்வுகளின் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என சீன நிறுவனம் தெரிவித்துள்ளதாக சஷீந்திர ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

எனினும், அவர்கள் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவில்லை எனவும் வேண்டுகோளாகவே அதனை முன்வைத்ததாகவும் அவர் கூறினார்.

இரண்டு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு இடத்தில் உரத்தின் தரம் தொடர்பாக பரிசோதனை நடத்தலாம் என யோசனை முன்வைக்கப்பட்டு, அதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதனிடையே, சீனாவின் சிந்தாஓ துறைமுகத்திலிருந்து 20,000 மெட்ரிக் தொன் சேதனப் பசளையை ஏற்றி புறப்பட்ட Hippo Sprit கப்பல் இருக்கும் இடத்தை செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக கண்டறிய முடியாத வகையில், கப்பல் கொழும்பை நோக்கி பயணிப்பதாக கடந்த சில தினங்களாக தகவல் வௌியானது.

இதேவேளை, SHIPS INFO என்ற சர்வதேச கப்பல் தரவுக்கட்டமைப்பிற்கு அமைய, Hippo Sprit கப்பல் ஏற்கனவே பயன்படுத்திய வேறொரு பெயரில் இலங்கை கடற்பரப்பினுள் பிரவேசித்துள்ளமை உறுதியாகியுள்ளது.

சர்வதேச தரவுகளுக்கு அமைய, கப்பலின் பெயர் Seiyo Explorer என குறிப்பிடப்பட்டுள்ளது.

கப்பலொன்றின் பெயர் அல்லது கொடி அல்லது உரிமையாளர் மாற்றப்பட்டாலும் அதிலுள்ள அடையாள இலக்கத்தை மாற்ற முடியாது.

இந்த இரண்டு பெயர்களிலும் அழைக்கப்படுகின்ற கப்பலுக்கு ஒரே அடையாள இலக்கமே உள்ளது.

இந்த தகவல்களுக்கு அமைய பெயர் மாற்றப்பட்ட கப்பல் சேதனப் பசளையுடன் இலங்கையை வந்தடைந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஜயந்த டி சில்வாவிடம் வினவியபோது, கப்பல் இலங்கையிலிருந்து சுமார் 12 கடல் மைல் தொலைவில் இருப்பதாக தமக்கு தகவல் கிடைத்ததென கூறினார்.

நேற்று முன்தினம் தென்கிழக்கு கடற்பரப்பில் சிறிய இராவணன் கோட்டை மற்றும் பெரிய இராவணன் கோட்டை ஆகிய வௌிச்ச வீடுகளை அண்மித்து இந்த கப்பல் இருப்பதாக தமக்கு GPS தகவல் கிடைத்தாலும் தற்போது கப்பல் அங்கு இல்லை என கொழும்பு துறைமுகத்தின் ஹார்பர் மாஸ்டர் தெரிவித்தார்.

இந்த கப்பலை கொழும்பு துறைமுகத்திற்குள் செலுத்துவதற்கு இன்னமும் அனுமதி கோரப்படவில்லை என ஹார்பர் மாஸ்டர் இன்று பகல் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்