by Staff Writer 25-10-2021 | 6:58 PM
Colombo (News 1st) கொழும்பின் முன்னாள் பிரதம நீதவானும் தற்போதைய மேல் நீதிமன்ற நீதிபதியுமான கிஹான் பிலபிட்டியவிற்கு எதிராக நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படும் வழக்கு தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதை தடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் பொலிஸ்மா அதிபருக்கு இன்று எழுத்தாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட வழக்கு நடவடிக்கை தொடர்பில் தொலைபேசி கலந்துரையாடலில் ஈடுபட்டமைக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பில் நுகேகொடை நீதவானுக்கு எழுத்தாணை உத்தரவை பிறப்பித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் , வழக்கின் பிரதிவாதியாக கிஹான் பிலபிட்டியவை பெயரிடுவதற்கு சட்டமா அதிபர் மேற்கொண்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்து உத்தரவிட்டுள்ளது.
கிஹான் பிலபிட்டியவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொலி ஆகியோரால் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.