இராமேஸ்வரம் மீனவர்கள் நான்காவது நாளாக பணிப்பகிஷ்கரிப்பு

by Staff Writer 25-10-2021 | 7:07 PM
Colombo (News 1st) இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 25 பேரையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் நான்காவது நாளாக பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும் பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைக் குறைத்து மானிய விலையில் தமக்கு வழங்குமாறும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வரும் தமிழகத்தின் ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இந்த பணிப்பகிஷ்கரிப்பினால் இராமேஸ்வரம் துறைமுகத்திலுள்ள 800-இற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 15,000-இற்கும் மேற்பட்ட இராமேஸ்வரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, புதுக்கோட்டை ஜெகதாபட்டினம் மீனவர்களும் 7ஆவது நாளாக தமது பணிப்பகிஷ்கரிப்பை தொடர்கின்றனர். இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கும் வரை தமது போராட்டம் தொடருமென இவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 25 பேர் இம்மாதம் கைது செய்யப்பட்டிருந்தனர். கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கடந்த 13 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேரும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். காரைநகர் கோவலம் கலங்கரை கடற்பகுதியில் கடந்த 19 ஆம் திகதி காப்பாற்றப்பட்ட இரண்டு இந்திய மீனவர்களும் எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கோவலம் கடற்பரப்பில் விபத்திற்குள்ளாகி உயிரிழந்த தமிழக மீனவரின் இறுதிக்கிரியை நேற்று முன்தினம் (23) தமிழகத்தில் நடைபெற்றது. இதனிடையே இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் இருவரையும், அடுத்த மாதம் முதலாம் திகதி வரை தடுத்து வைக்குமாறு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.