ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் இன்று முதல் சட்டப்படி வேலை; நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் இன்று முதல் சட்டப்படி வேலை; நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

25 Oct, 2021 | 8:27 pm

Colombo (News 1st) ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் இன்று (25) எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தது.

பாடசாலை முடிவடைந்த பின்னர் இரண்டு மணியளவில் கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க பிரதிநிதிகள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுவரை தீர்க்கப்படாதுள்ள தமது பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தி இந்த கவனயீர்ப்பு நடத்தப்பட்டது.

இன்று முதல் தாம் சட்டப்படி தொழில் புரியம் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் இதன்போது அறிவித்தனர்.

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க ஒன்றிய பிரதிநிதிகள் இதன்போது பேரணியொன்றையும் நடத்தினர்.

இதனிடையே, குருநாகல் நகரில் கூடிய ஆசிரியர் – அதிபர் சங்கம், ஆளுநர் அலுவலகம் வரை பேரணியை முன்னெடுத்தது.

வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே, ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் தெரிவித்த கருத்திற்கு இதன்போது கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோது, ஆளுநர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கத்தினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் இதன்போது அமைதியின்மை ஏற்பட்டது.

வெலிமடை நகரிலும் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தம்புள்ளை, நிட்டம்புவ, ஹொரணை மற்றும் நீர்கொழும்பு உள்ளிட்ட பகுதிகளிலும் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்