by Staff Writer 24-10-2021 | 8:30 PM
Colombo (News 1st) உலகக்கிண்ண T20 கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷூக்கு எதிரான இன்றைய போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்களால் வெற்றியீட்டியது.
சார்ஜாவில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், 20 ஓவர்களில் 4 விக்கட்களை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றது.
மொஹமட் நயீம் 62 ஓட்டங்களையும் முஷிபிகுர் ரஹீம் ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களையும் பெற்றனர்.
172 என்ற வெற்றி இலக்கை நோக்கி, பதிலளித்தாடிய இலங்கை அணியின் முதல் விக்கட் 2 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.
குசல் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, வனிந்து ஹசரங்க ஆகிய வீரர்கள் பிரகாசிக்க தவறியமையால், இலங்கை அணி 79 ஓட்டங்களுக்குள் 04 விக்கட்களை இழந்தது.
இந்த நிலையில், ஐந்தாவது விக்கட்டிற்காக ஜோடி சேர்ந்த சரித் அசலங்க - பானுக ராஜபக்ஸ ஜோடி 86 ஓட்டங்களை அதிரடியாக பெற்று அணியின் வெற்றியிலக்கை உறுதி செய்தது.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களை பெற்ற சரித் அசலங்க தெரிவானார்.