சீனாவில் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடங்கள் வழங்க தடை

குழந்தைகளுக்கு வீட்டுப்பாடங்கள் வழங்க தடை விதிக்கும் சீனா

by Bella Dalima 24-10-2021 | 1:56 PM
Colombo (News 1st) சீனாவில் குழந்தைகளை மன அழுத்தத்திலிருந்து பாதுகாக்க வீட்டுப்பாடங்கள் மற்றும் விசேட வகுப்புகள் உள்ளிட்ட நடைமுறைகளுக்கு தடை விதிக்கும் வகையிலான சட்டவரைவை அந்நாட்டு அரசு தயாரித்துள்ளது. சீனாவில் சமீபகாலமாக குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரையிலானோருக்கு மன ஆரோக்கியத்தை பாதிக்கும் வகையிலான செயல்பாடுகளை அந்நாட்டு அரசு தடை செய்து வருகிறது. சீனாவில் ஏற்கனவே குழந்தைகள் ஒன்லைன் விளையாட்டுகளை வாரத்திற்கு 3 மணி நேரங்கள் மட்டுமே விளையாட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிய முயற்சியில் அந்நாடு இறங்கியுள்ளது. பாடசாலை குழந்தைகளின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் அவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் வழங்குவது, விசேட வகுப்புகள் நடத்துவது உள்ளிட்ட நடைமுறையை தடை செய்வதற்கான சட்டவரைவை சீனா தயாரித்துள்ளது. மேலும், குழந்தைகள் இணைய வெளியில் அதிக நேரம் செலவழிப்பதைத் தடுக்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதிலும், அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதில் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சட்டவரைவு தயாரிப்புப் பணி முழுமையடைய உள்ள நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.