சீன நிறுவனத்திற்கான கொடுப்பனவு இடைநிறுத்தம்

பக்டீரியா அடங்கிய சேதன பசளையை அனுப்பி வைத்த சீன நிறுவனத்திற்கான கொடுப்பனவு இடைநிறுத்தம்

by Bella Dalima 23-10-2021 | 6:42 PM
Colombo (News 1st) பாதிப்பை ஏற்படுத்தும் பக்டீரியா அடங்கிய சேதன பசளையை நாட்டிற்கு அனுப்பிய சீன நிறுவனத்திற்கான கொடுப்பனவை இடைநிறுத்தி, இலங்கை உர நிறுவனம் இடைக்கால தடையுத்தரவை பெற்றுக்கொண்டுள்ளது. குறித்த சீன நிறுவனம், அதன் உள்நாட்டு முகவர் மற்றும் அரச வங்கியொன்றுக்கு எதிராக வரையறுக்கப்பட்ட இலங்கை உர நிறுவனத்தினால் நேற்று (22) கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தினால் இந்த இடைக்கால தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது. குறித்த இடைக்கால தடையுத்தரவிற்கமைய, சீன நிறுவனத்திற்கு வழங்கப்படும் கடனுக்கான கடிதத்தின் கீழ் அரச வங்கியினால் எவ்வித கொடுப்பனவுகளையும் வழங்க முடியாது. குறித்த சீன நிறுவனமோ அதன் உள்நாட்டு முகவரோ கடன் கடிதத்தின் கீழ் எவ்வித கொடுப்பனவையும் பெற்றுக்கொள்வதை தடுக்கும் வகையில், வணிக மேல் நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவையினால் அனுப்பப்பட்ட மாதிரி சோதனைக்குட்படுத்தப்பட்டு பாதிப்பை ஏற்படுத்தும் பக்டீரியா உள்ளிட்ட சில நுண்ணுயிர்கள் அதில் அடங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த உரத் தொகை, விவசாய அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட ஒரு பில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய விலைமனு கோரலின் அடிப்படையில் பெறப்பட்ட ஏற்றுமதியின் ஒரு பகுதியாகும்.