திரவ பசளை கொடுக்கல் வாங்கல் தொடர்பான குற்றச்சாட்டை நிராகரித்தார் P.B. ஜயசுந்தர

by Bella Dalima 23-10-2021 | 1:17 PM
Colombo (News 1st) இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பசளைக்கான கொடுப்பனவான 29 கோடி ரூபா பணத்தை தனிப்பட்ட வங்கி கணக்கிற்கு பரிமாற்றுவதற்கு அழுத்தம் விடுத்ததாக வார இறுதி பத்திரிகையொன்றில் வௌியான செய்தி முற்றிலும் பொய்யானது என ஜனாதிபதி செயலாளர் P.B. ஜயசுந்தர அறிவித்துள்ளார். குறித்த செய்தியை அவர் முழுமையாக நிராகரித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பத்திரிகையில் வௌியாகியுள்ள செய்தி தொடர்பில் அனைத்து தரப்பினரையும் அழைத்து பூரண விசாரணை நடத்துமாறு , பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி செயலாளர் அறிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிடமிருந்து நனோ நைட்ரஜன் யூரியா திரவ பசளை இறக்குமதியின் போது இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நேற்றைய அமர்வின் போது சில விடயங்களை அம்பலப்படுத்தியிருந்தார்.