திரவ உர இறக்குமதிக்கான கொடுக்கல் வாங்கலில் மோசடி? 

by Staff Writer 23-10-2021 | 10:15 PM
  Colombo (News 1st) இந்தியாவில் இருந்து திரவ உரம் இறக்குமதி செய்த போது, அதற்கான நிதி தனியார் நிறுவனம் ஒன்றின் கணக்கிற்கு செலுத்தப்பட்டுள்ளமை தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உரம் இன்றி விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், உர இறக்குமதிக்காக பயன்படுத்தப்பட்ட மக்களின் பணம் தனியார் நிறுவனமொன்றின் கணக்கிற்கு அனுப்பப்பட்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நேற்று (22) பாராளுமன்றத்தில் தௌிவுபடுத்தினார். இந்தியாவின் நனோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்வதற்காக 29 கோடி ரூபா கடந்த 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தனியார் நிறுவனமொன்றின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். இந்த பணத்தில் 9 கோடியே 20 இலட்சம் ரூபாவை மாத்திரமே உரம் கொண்டு வருவதற்காக செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய தொகை குறித்த கணக்கில் தொடர்ந்தும் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த விடயம் தொடர்பில் பத்திரிகை ஒன்றில் இன்று வௌியான செய்தியை அடிப்படையாக வைத்து, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இந்தியாவில் இருந்து உரம் கொண்டு வருவதற்கான 29 கோடி ரூபாவை தனியார் கணக்கொன்றுக்கு அனுப்புவதற்கு ஜனாதிபதி செயலாளர் அழுத்தம் விடுத்தார் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. உரத்தை கொண்டு வருவதற்காக குறித்த வங்கிக் கணக்கை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதியின் செயலாளர் P.B.ஜயசுந்தர மக்கள் வங்கியின் நகர மண்டப கிளைக்கு தொடர்ந்தும் அழுத்தம் விடுத்திருந்ததாக பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், தான் அழுத்தம் விடுத்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை ஜனாதிபதியின் செயலாளர் முற்றிலும் நிராகரிப்பதாக ஜனாதிபதி செயலகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது உண்மைக்கு புறம்பான செய்தி எனவும் குரோதத்தை ஏற்படுத்தும் விடயம் எனவும் தெரிவித்துள்ள ஜனாதிபதியின் செயலாளர் P.B. ஜயசுந்தர, இந்த விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார். இதேவேளை இந்த கொடுக்கல் வாங்கலின் போது பணம் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கணக்கு உரிமத்தைக் கொண்ட United Farmers Trust Ltd. நிறுவனம் சார்பில் இலங்கை , இந்திய வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு சபை என்ற பெயரில் அறிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 5 பங்காளர்களைக் கொண்டது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை, இந்திய கடல் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு சபை, இலங்கை ஐரோப்பிய சங்க வர்த்தக சம்மேளனம், ஶ்ரீலங்கா கல்ஃப் வர்த்தக மற்றும் முதலீட்டு சபை, Ceylon Oil and Energy தனியார் நிறுவனம் மற்றும் மொஹான் பெரேரா நிறுவனம் என்பன இதன் பங்காளர்களாவர். பசுமை விவசாயத் திட்டம் தொடர்பிலான ஜனாதிபதியின் கொள்கைத் திட்டத்திற்கு ஏற்ப, United Farmers Trust Ltd நிறுவனம் அடுத்த 2 வருடங்களில் சேதனப் பசளை மற்றும் விவசாய இரசாயனத் திரவியம் என்பவற்றிற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சேதனப் பசளை தொழிற்சாலை ஒன்றுக்காக தற்போது மிகிந்தலை பிரதேசத்தில் 30 ஏக்கர் காணி பெறப்பட்டுள்ளதாகவும் அதனை 125 ஏக்கராக விஸ்தரித்து, திட்டத்தை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். அதன்படி, United Farmers Trust Ltd நிறுவனம் 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் 18 ஆம் திகதி புதிதாக ஆரம்பித்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக இந்திய கடல் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு சபை என்ற பெயரில் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை நிறுவனத்திற்கு பணம் செலுத்துவதற்காக , இறக்குமதி அனுமதிப் பத்திர கட்டணத்தை செலுத்துவதற்கும் பொருள் போக்குவரத்து கட்டணத்தை செலுத்துதல் போன்ற விடயங்களுக்காகவே உரத்தை கொண்டு வந்ததன் பின்னர் எஞ்சியுள்ள டொலரை ரூபாவிற்கு மாற்றுவதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமது கணக்கிற்கு கிடைத்த பணத்தில் 3,80,072 டொலர்கள் மாத்திரமே இந்திய நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் அவர்கள் தௌிவுபடுத்தியுள்ளனர். United Farmers Trust Ltd நிறுவனத்தின் கணக்கிற்கு திறைசேரியிலிருந்து பணம் அனுப்பப்பட்டதன் பின்னர், இலங்கை நிறுவனத்தின் பொருள் போக்குவரத்திற்காக விடயங்களை ஒதுக்கிக்கொண்டதன் பின்னர் ஒரு இலட்சம் லிட்டர் நனோ நைட்ரஜனை முதலாவது தொகுதியில் ஏற்றுவதற்கு விமானத்தில் இடம் போதாது என்பது தெரியவந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருட்களை போக்குவரத்து செய்வதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே எதிர்பார்த்த கொள்ளளவில் மூன்றில் ஒரு பகுதிக்கான கொடுப்பனவை மாத்திரம் வழங்க வேண்டியேற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.