by Bella Dalima 23-10-2021 | 1:26 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் இளைஞர் மீது தாக்குதல் நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர், இளைஞர் மீது தாக்குதல் மேற்கொள்ளும் காணொளி நேற்று (22) மாலை சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
ஏறாவூரில் விபத்தொன்று நடைபெற்ற இடத்தில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், அங்கு அளவீட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த இடத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்ட போதும், குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் நிறுத்தாது சென்றமையால், பொலிஸ் உத்தியோகத்தரால் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
தாக்குதலுக்கு இலக்கான இளைஞரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.