உலகக்கிண்ண T20: இலங்கை அணி பிரதான சுற்றுக்கு தகுதி

உலகக்கிண்ண T20: இலங்கை அணி பிரதான சுற்றுக்கு தகுதி

உலகக்கிண்ண T20: இலங்கை அணி பிரதான சுற்றுக்கு தகுதி

எழுத்தாளர் Bella Dalima

23 Oct, 2021 | 6:20 am

Colombo (News 1st) உலகக்கிண்ண T20 கிரிக்கெட் தொடரில் தகுதிகாண் சுற்றில் நெதர்லாந்திற்கு எதிரான ​நேற்றைய போட்டியை 8 விக்கெட்களால் இலங்கை அணி வெற்றிகொண்டது.

இதன் மூலம் தகுதிகாண் சுற்றில் 3 போட்டிகளையும் வெற்றிகொண்ட நிலையில், இலங்கை அணி பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இலங்கை அணியில் தினேஷ் சந்திமால் நீக்கப்பட்டு சரித் அசலங்கவிற்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நெதர்லாந்து அணி ஆரம்பம் முதலே தடுமாற்றத்திற்குள்ளானது.

3 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட் வீழ்த்தப்பட்ட நிலையில், மூன்றாவது ஓவரை வீசிய மஹீஸ் தீக்ஷன இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்.

எனினும், அந்த ஓவரின் இறுதியில் உபாதைக்குள்ளான மஹீஸ் தீக்சன தொடர்ந்தும் பந்து வீச முடியாது அரங்கம் திரும்பினார்.

மற்றைய சுழற்பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்கவும் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்த நெதர்லாந்து நெருக்கடிக்குள்ளானது.

கொலின் அக்கர்மன் பெற்ற 11 ஓட்டங்களே அணி சார்பில் வீரர் ஒருவர் பெற்ற அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்.

நான்கு வீரர்கள் ஓட்டமின்றி ஆட்டமிழந்ததுடன், ஏனைய வீரர்களும் 10-க்கும் குறைவான ஓட்டங்களுடன் வௌியேறினர்.

நெதர்லாந்து அணியின் துடுப்பாட்டம் 10 ஓவர்களில் 44 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது.

பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 3 ஓவர்களில் 9 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மஹீஸ் தீக்ஷன ஓர் ஓவரில் 3 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லஹிரு குமார 3 ஓவர்களில் 7 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இலகுவான இலக்கான 45 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி 7.1 ஓவரில் 2 விக்கட்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான பெதும் நிஸ்ஸங்க ஓட்டமின்றி ஆட்டமிழந்தார்.

வெற்றி பெறுவதற்கு மேலும் 14 ஓட்டங்களே தேவையாக இருந்த போது, சரித் அசலங்க 6 ஓட்டங்களுடன் வௌியேறினார்.

குசல் ஜனித் பெரேரா 33 ஓட்டங்களையும் அவிஸ்க பெர்னாண்டோ 2 ஓட்டங்களையும் பெற்று வெற்றியை உறுதி செய்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்