தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு கோரிக்கை

இலங்கையில் கைதாகியுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு தேசிய மீனவர் பேரவை வலியுறுத்தல்

by Staff Writer 22-10-2021 | 7:23 PM
Colombo (News 1st) இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்தமையால் அண்மையில் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களையும் விரைவில் விடுவிக்குமாறு இந்தியாவின் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் இணை அமைச்சர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பருத்தித்துறை, பலாலி கடற்பரப்பில் கடந்த 13 ஆம் திகதி அத்துமீறி நுழைந்த தமிழகத்தின் நாகபட்டினத்தை சேர்ந்த 23 மீனவர்கள் தொடர்ந்தும் காரைநகர் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், குறித்த மீனவர்களை விரைவில் விடுவிக்குமாறு தேசிய மீனவர் பேரவைத் தலைவர் மா.இளங்கோ, மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபலா மற்றும் இணை அமைச்சர் எல்.முருகனை வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் குறித்த இருவரையும் இன்று சந்தித்த தேசிய மீனவர் பேரவைத் தலைவர் மா.இளங்கோ, கோரிக்கை மனுவொன்றையும் கையளித்துள்ளார். கடலில் வழிதவறி மீன்பிடிக்க சென்ற தமிழகத்தின் நாகபட்டினம் - அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீதான வழக்கை இரத்து செய்ய வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. அத்துடன் இந்திய - இலங்கை மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் தீர்க்கமான இறுதிக்கட்ட முடிவை எடுக்கும் வகையில், இரு நாட்டு மீனவர்களுக்கிடையிலான ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் ஏற்பாடு செய்யப்பட வேண்டுமெனவும் தேசிய மீனவர் பேரவைத் தலைவர் மா.இளங்கோ இந்த சந்திப்பில் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும் தேசிய மீனவர் பேரவை கடிதமொன்றை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.