மாகாண சபை தேர்தல் தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள்; குழப்பத்தில் மக்கள் – கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அறிக்கை

மாகாண சபை தேர்தல் தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள்; குழப்பத்தில் மக்கள் – கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அறிக்கை

மாகாண சபை தேர்தல் தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள்; குழப்பத்தில் மக்கள் – கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அறிக்கை

எழுத்தாளர் Staff Writer

22 Oct, 2021 | 6:43 pm

Colombo (News 1st) மாகாண சபை தேர்தல் தொடர்பில் அரசாங்கம் அவ்வப்போது மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருவது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருவதாக, வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் துணை செயலாளருமான கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதனை தவிர்ப்பதற்கு அரசாங்கம் உறுதியான முடிவை எடுக்க வேண்டும் என அறிக்கை ஒன்றினூடாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு நான்கு ஆண்டுகளும் வடக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு மூன்று ஆண்டுகளும் கடந்துள்ள போதிலும், இதுவரை தேர்தல் பற்றிய தெளிவற்ற, குழப்பகரமான கருத்துகளை பல்வேறு அமைச்சர்களும் நாளாந்தம் தெரிவித்து வருவதாக கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

19 ஆவது திருத்தத்தின் ஊடாக குறைக்கப்பட்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் அனைத்தும் 20ஆவது திருத்தத்தின் ஊடாக மீள பெறப்பட்டுள்ளதாகவும், தேர்தல் திருத்தங்களை பொறுத்தவரை தேவைப்படும் மாற்றங்களை அரசியல் யாப்பு திருத்தத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அரசாங்கம் புதிய அரசியல் யாப்பினை அறிமுகப்படுத்த முனைவதற்கு மாகாண சபையை ஒழிப்பது அல்லது அதிகாரம் எதுவுமற்ற ஒன்றாக மாற்றுவது தவிர, வேறு எந்த உருப்படியான காரணங்களையும் காண முடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாகவும் இந்தியாவின் ஆதரவு அரசாங்கத்திற்கு அவசியப்படுவதன் காரணமாகவும் இந்திய அரசாங்கத்தை திருப்திப்படுத்தவே அடுத்த ஆண்டில் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என்று ஓரிரு அமைச்சர்கள் கூறி வருவதாகவும் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த குழப்பகரமான நிலைப்பாட்டிற்கு ஆட்சியாளர்கள் முற்றுப்புள்ளி வைத்து, மாகாண சபை தேர்தல் தொடர்பில் உறுதியான முடிவை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் துணை செயலாளர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் தனது அறிக்கையூடாக கோரிக்கை விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்