நமீபியாவை வென்றது இலங்கை அணி

T20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது இலங்கை

by Staff Writer 18-10-2021 | 10:45 PM
Colombo (News 1st) இம்முறை உலகக் கிண்ண 20 க்கு 20 கிரிக்கெட் தொடரில் தமது முதலாவது போட்டியில் விளையாடிய இலங்கை அணி 07 விக்கெட்களால் வெற்றியீட்டியது. நமீபியாவிற்கு (Namibia) எதிரான இந்தப் போட்டி அபுதாபியில் இன்று (18) நடைபெற்றது. அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன் பிரகாரம் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா 19.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 96 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். நமீபியா சார்பில் கிரேக் வில்லியம்ஸ் 29 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன் அணித் தலைவர் கெர்ஹாட் 20 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் மகேஸ் தீக்சன 25 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்களை வீழ்த்தியதுடன் வனிந்து ஹசரங்க 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார். லஹிரு குமார 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார். சாமிக கருணாரத்ன மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். 97 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை 13.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தனர். இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரோ 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததுடன் பெத்தும் நிசங்க மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் தலா 5 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். இதன் பின்னர் சிறப்பான ஆட்டத்தை வௌிப்படுத்திய அவிஸ்க பெர்னாண்டோ மற்றும் பானுக ராஜபக்ச ஜோடி 50 பந்துகளில் 74 ஓட்டங்களை பெற்றனர். அவிஷ்க பெர்னாண்டோ ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களை பெற்றதுடன் பானுக ராஜபக்ச ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதினை மகேஷ் தீக்சன பெற்றுக் கொண்டார்.