New Fortress ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி ஆலோசனை

New Fortress ஒப்பந்தம் தொடர்பில் பிரதமர், நிதி அமைச்சருடன் கலந்துரையாடுமாறு ஜனாதிபதி ஆலோசனை

by Staff Writer 16-10-2021 | 3:48 PM
Colombo (News 1st) யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்கை அமெரிக்காவின் New Fortress நிறுவனத்திற்கு வழங்கியமை தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவுடன் கலந்துரையாடுமாறு அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார். குறித்த ஒப்பந்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஆளும் கட்சியின் 11 பங்காளி கட்சிகளுக்கு நேரத்தை ஒதுக்கித்தருமாறு கோரி ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்திற்கு, ஜனாதிபதியால் அனுப்பிய பதில் கடிதத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிடம் வினவிய போது, கட்சித் தலைவர்களுக்கு, ஜனாதிபதி தனது பதிலை கடிதத்தினூடாக வழங்கியுள்ளதாக அவர் கூறினார். ஜனாதிபதியினால் அனுப்பியுள்ள கடிதம் தொடர்பில் ஆளும் கட்சியின் 11 பங்காளி கட்சிகளின் தலைவர்களும் இன்று சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்கை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கியமை சட்டவிரோதமானது என தெரிவித்து, ஆளும் தரப்பின் 11 பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி பிரதமரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். அதன் பின்னர் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அறிவித்தனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சம சமாஜ கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, ஸ்ரீ லங்கா கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 11 கட்சிகளின் தலைவர்கள் பிரதமரை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.