பிரிட்டன் MP டேவிட் அமெஸ் கத்தியால் குத்தி கொலை

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் டேவிட் அமெஸ் கத்தியால் குத்தி கொலை

by Bella Dalima 16-10-2021 | 2:52 PM
Colombo (News 1st) பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் டேவிட் அமெஸ் (David Amess) கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இது பயங்கரவாதச் செயலென பொலிஸார் அறிவித்துள்ளனர். இந்தக் கொலைக்கு பின்னால் பாரிய தீவிரவாதக் கும்பலொன்றின் ஊக்குவிப்பு உள்ளதாக பிரித்தானிய மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அமைச்சர் டேவிட் அமெஸின் கொலை தொடர்பில் 25 வயதான பிரித்தானிய பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலையுடன் தொடர்புபட்ட ரீதியில், வேறெந்த சந்தேகநபரையும் தாம் தேடவில்லையெனவும் பிரித்தானிய பொலிஸார் கூறியுள்ளனர். முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக லண்டனில், இரண்டு முகவரிகளில் தேடுதல் நடத்தப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் தனியாகவே இந்த கத்திக்குத்து தாக்குதலை நடத்தியுள்ளதாக தாம் நம்புகின்ற போதிலும், அது மேற்கொள்ளப்பட்டமைக்கான சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கண்டறிவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. Essex பிராந்தியத்தின் Leigh-on-Sea பகுதியில் வைத்து, கன்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் Sir David Amess பல தடவைகள் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். 69 வயதான பாராளுமன்ற உறுப்பினர் 5 பிள்ளைகளின் தந்தையாவார். Sir David Amess 1983 ஆம் ஆண்டில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு வந்துள்ளார். அவரது மறைவிற்கு பிரித்தானிய பிரதமர் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.