அபே ஜனபல கட்சியிலிருந்து அத்துரலியே ரத்தன தேரர் நீக்கம்

அபே ஜனபல கட்சியிலிருந்து அத்துரலியே ரத்தன தேரர் நீக்கம்

அபே ஜனபல கட்சியிலிருந்து அத்துரலியே ரத்தன தேரர் நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

16 Oct, 2021 | 3:12 pm

Colombo (News 1st) அபே ஜனபல (Ape Janabala) கட்சியினூடாக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரின் கட்சி உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டுள்ளதாக, குறித்த கட்சியினால் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் பொதுச்செயலாளரால் எழுத்து மூலம் நேற்றைய தினம் தனக்கு குறித்த அறிவித்தல் கிடைத்ததாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்ஜிஹேவா தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக, நியூஸ்ஃபெஸ்ட் வினவிய போது, அபே ஜனபல கட்சியின் பொதுச்செயலாளர் நிஷாந்த ரத்நாயக்க குறிப்பிட்டார்.

கொழும்பு துறைமுகநகர விசேட பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிப்பதற்கு அபே ஜனபல கட்சி தீர்மானித்திருந்த போதிலும், அந்த தீர்மானத்திற்கு மதிப்பளிக்காது தனது தனிப்பட்ட விருப்பத்திற்கு அமைய சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த குற்றச்சாட்டில் அத்திரலியே ரத்தன தேரர் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் கட்சியின் செயலாளர் தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு அமைய, தங்களின் கட்சிக்கான தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருக்கான பெயர், கட்சியின் அரசியல் குழுவினூடாக தீர்மானிக்கப்படும் என அவர் கூறினார்.

எவ்வாறாயினும், அத்துரலியே ரத்தன தேரரின் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டமைக்கான கடிதம் இதுவரை தனக்கு கிடைக்கவில்லை என பாராளுமன்ற செயலாளர் நாயகம் நியூஸ்ஃபெஸ்ட்டுக்கு அறிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்