வர்த்தக உரிமங்கள் தொடர்பில் புதிய சுற்றறிக்கை

மணல் அகழ்வு, போக்குவரத்து, வர்த்தக உரிமங்கள் தொடர்பில் புதிய சுற்றறிக்கை வௌியீடு

by Staff Writer 15-10-2021 | 8:18 PM
Colombo (News 1st) கருங்கல், மணல், மண், சரளை, களிமண் அகழ்வு, போக்குவரத்து மற்றும் வர்த்தகம் தொடர்பிலான உரிமங்களை வழங்குவது தொடர்பில் புதிய சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. அபிவிருத்திக்கு முக்கியத்துவமளித்தல், தனியார் தொழில் முயற்சியாளர்கள், சிறு சுயதொழில் மற்றும் மரபு ரீதியிலான தொழில்களில் ஈடுபடுபவர்களின் பொருளாதார, வாழ்வாதார தேவைக்காக நில வளங்களை பயன்படுத்துதல் மற்றும் அவற்றை பெற்றுக்கொள்ளும் அடிப்படை, பொறிமுறைகளை ஆய்வு செய்வதற்காக ஜனாதிபதியினால் ஜனாதிபதி செயலணியொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சுற்றாடலை பாதுகாக்கும் வகையில், உரிமங்களை வழங்குவதற்கான பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்துவது குறித்த செயலணியின் பொறுப்பாகும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயலணியின் பொறிமுறைக்குட்பட்ட வகையில் கனியவள அகழ்வு, போக்குவரத்து மற்றும் வர்த்தக செயற்பாடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி கிடைத்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நில வளங்களை அகழ்வதற்கு பொருத்தமான இடங்களை முன்னரே கண்டறிதல், அவற்றை பட வரைவுக்கு உட்படுத்தல், அந்நில வளங்கள் உரித்துடைய நிறுவனங்களை அடையாளம் காணல் மற்றும் அவசியமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளல் போன்ற செயற்பாடுகளை அந்தந்த நிறுவனங்களின் கட்டமைப்பிற்குள் செயற்படுத்த வேண்டுமென நில வளங்கள் தொடர்பான ஜனாதிபதி செயலணி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் மூலம் இதுவரை உரிமங்களை வழங்குதல் தொடர்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த செயற்பாடுகளை முழுமையாக மீள் ஒழுங்குபடுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென சுற்றறிக்கையின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு அவசியமான அதிகாரத்தை வழங்கவும் அவசியமான சட்ட ஆவணங்களை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றறிக்கையின் மூலம் தௌிவுபடுத்தப்பட்டுள்ளது.