மாறுபட்ட COVID தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வது நல்லதா?

மாறுபட்ட COVID தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டால் உடலில் பிறபொருளெதிரிகள் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்

by Bella Dalima 14-10-2021 | 3:30 PM
 Colombo (News 1st) மாறுபட்ட COVID தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வது உடலில் அதிகளவான பிறபொருளெதிரிகளை (Antibodies) உருவாக்குவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரே வகையான தடுப்பூசியை ஊக்கி (Booster) எனப்படும் மூன்றாவது தடுப்பூசியாக ஏற்றுவதால் உருவாகும் பிறபொருளெதிரிகளை விட அதிகளவானவை வெவ்வேறு தடுப்பூசிகளை ஏற்றுவதால் கிடைப்பதாக அமெரிக்க அரசாங்கத்தின் அனுசரணையுடன் நடத்தப்பட்டு, மிக நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஆய்வின் ஆரம்பகட்ட முடிவுகளில் தெரியவந்துள்ளது. ஊக்கி தடுப்பூசியாக, ஆரம்பத்தில் ஏற்றிக்கொண்ட தடுப்பூசிக்கு மாற்றாக வேறொன்றை ஏற்றுவதனால் கிடைக்கும் செயற்றிறனை ஒப்பிட்டுப் பார்க்கும் ஆய்வு முன்னெடுக்கப்பட்டது. 450-க்கும் அதிகமானவர்களை பயன்படுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நடந்து வரும் இந்த ஆய்வின் முடிவுகள் இன்னும் மதிப்பாய்வு செய்யப்பட்டு மருத்துவ இதழில் வெளியிடப்படவில்லை. ஆய்வைப் பற்றிய கூடுதல் விவரங்கள் வெள்ளிக்கிழமை FDA ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு சோதனையை நடத்தும் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆரம்ப கண்டுபிடிப்புகள் குறித்து விளக்கங்களை வழங்க திட்டமிட்டுள்ளனர்.