பசில் ராஜபக்ஸ, திருக்குமார் நடேசனுக்கு எதிரான வழக்கு விசாரணை

by Bella Dalima 14-10-2021 | 7:37 PM
Colombo (News 1st) நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் ஸ்திரமற்ற தன்மை காணப்படும் பின்புலத்தில், பொது நிதி தொடர்பான முறைகேடுகள் குறித்து சட்டப்பிரிவு கரிசனை கொள்ளவேண்டியுள்ளது. மல்வானை - மாபிட்டிகமவில் 16 ஏக்கர் காணியில் நீச்சல் தடாகத்துடனான வீடொன்று நிர்மாணிக்கப்பட்டு, விலங்குப் பண்ணை நடத்திச் செல்ல அரச பணம் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் வர்த்தகரான திருக்குமார் நடேசன் ஆகியோருக்கு எதிராக மூன்று குற்றப்பத்திரங்களின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, மேல் நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பட்டய கட்டடக் கலைஞர் முதித உபாலி ஜயக்கொடியிடம் இன்று குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. தாம் நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு வழங்கிய வாக்குமூலம் பொய்யானது என சாட்சியாளர் இன்று ஒப்புக்கொண்டுள்ளார். அத்துடன், நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் குழு, தமது அலுவலகம் மற்றும் வீட்டை சோதனைக்கு உட்படுத்தி ஆவணங்கள் சிலவற்றில் கையொப்பம் பெற்றுக்கொண்டதாகவும் சாட்சியாளர் கூறியுள்ளார். சான்றுப்பொருட்களாக பெயரிடப்பட்டுள்ள ஆவணங்களிலுள்ள கையொப்பம் தம்முடையதாக இருப்பதற்கும், தம்முடையதாக இல்லாமல் இருப்பதற்கும் இடமுள்ளதாக சாட்சியாளர் சந்தேகம் தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணை நவம்பர் மாதம் முதலாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.