கையடக்க தொலைபேசி இலக்கங்களை வேறு வலையமைப்பிற்கு மாற்றிக்கொள்ளும் வசதி விரைவில்

by Bella Dalima 14-10-2021 | 12:14 PM
Colombo (News 1st) கையடக்க தொலைபேசி இலக்கங்களை வேறு வலையமைப்பிற்கு மாற்றிக்கொள்வதற்கான (Number Portability) வசதியை சட்டரீதியாக வழங்குவதற்கான அனுமதி கிடைத்துள்ளது. இத்தகவலை இலங்கையின் தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனாநாயக்க உறுதிப்படுத்தினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அனைத்து சந்தாதாரர்களுடனும் (subscribers) ஒரு மைய தரவுத்தளத்தை உருவாக்க இந்த வார தொடக்கத்தில் அனைத்து சேவை வழங்குநர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். "எண்ணை வரைபடமாக்க மத்திய தரவுத்தளம் தேவை, நாங்கள் மற்ற நாடுகளிலிருந்து இந்த செயன்முறையை கற்றுக்கொண்டிருக்கிறோம்," என அவர் மேலும் கூறினார். தனியார் நிறுவனங்களின் தொலைத்தொடர்பு கோபுரங்களை அரச தலையீட்டுடன் நிர்மாணிக்கும் போது, அரசாங்கத்திற்கு அதிக இலாபம் கிடைகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அனைத்து தொழில்நுட்ப செயற்பாடுகளும் நிறைவடையும் பட்சத்தில், 2022 மே முதல் இந்த சேவை நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பாவனையாளர்கள் ஒரு வலையமைப்பில் இருந்து மற்றொரு வலையமைப்பிற்கு மாறினாலும் அவர்களின் தொலைபேசி இலக்கத்தை நிலையாகப் பேண முடியும்.