ஏறாவூரில் துணி உற்பத்தி வலயம் அமைக்கப்படவுள்ளது

ஏறாவூரில் விசேட துணி உற்பத்தி வலயம் அமைக்கப்படவுள்ளது

by Bella Dalima 14-10-2021 | 6:10 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - ஏறாவூரில் ஒரு புதிய விசேட துணி உற்பத்தி வலயத்தை அமைக்க அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழு அனுமதி வழங்கியுள்ளது. 400 ஏக்கர் பரப்பில் இந்த விசேட வலயம் அமைக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற ஊடகப் பிரிவினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பாவின் தலைமையில் கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற அரசாங்க நிதி தொடர்பான குழுவின் கூட்டத்தின் போது இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வௌிநாட்டு சந்தைகளை இலக்காகக் கொண்டு, உயர் தரத்திலான துணிகளின் உற்பத்திகளை ஆரம்பிப்பதற்கு ஏறாவூர் பகுதியிலுள்ள இரண்டு தொழிற்சாலைகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் இதன்போது கூறியுள்ளார். நாடு தற்போதுள்ள நிலையில், முதலீட்டு வாய்ப்புகள் மிகவும் முக்கியமானது எனவும், அனைத்து துணி உற்பத்தியாளர்களுக்கும் சம வாய்ப்புகளும் வரி நிவாரணங்களும் வழங்கப்படுவது அவசியம் எனவும் அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.