திரவ சேதனப் பசளை பகிர்ந்தளிக்கப்படவுள்ளது

அம்பாறை விவசாயிகளுக்கு திரவ சேதனப் பசளை பகிர்ந்தளிக்கப்படவுள்ளது

by Bella Dalima 14-10-2021 | 11:29 AM
Colombo (News 1st) அம்பாறை மாவட்டத்தில் 50,000 ஹெக்டேர் காணிக்கான திரவ சேதனப் பசளையை இன்று (14) முதல் விநியோகிக்கவுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, நாளை மாலை அம்பாறையிலுள்ள விவசாயிகளுக்கு திரவ சேதனப் பசளை பகிர்ந்தளிக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்திலுள்ள 66,000 விவசாயிகள் சேதனப் பசளை தயாரிப்பிற்கான நிதியை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். சேதனப் பசளையை தயாரிக்காத விவசாயிகளுக்கு அதனை கொள்வனவு செய்வதற்கு தேவையான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என விவசாய அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை, லிதுவேனியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பொட்டாசியம் குளோரைட் அடங்கிய சேதனப் பசளையை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பெரும்போகத்திற்கு தேவையான அனைத்து வகையான பசளைகளையும் விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சர் சுட்டிக்காட்டினார். இம்மாத இறுதியில் விவசாயிகளுக்கு பசளை தேவைப்படுகின்ற போதிலும், விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ள தேவையற்ற அச்சத்தை களையும் நோக்கில், இறக்குமதி செய்யப்படும் பசளையை உடனுக்குடன் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இம்மாத இறுதியில் நனோ நைட்ரஜன் பசளையை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யவும் எதிர்பார்த்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சுட்டிக்காட்டினார்.