வசந்த கரன்னாகொட வழக்கு:  சட்டமா அதிபரின் அறிவிப்பு

வசந்த கரன்னாகொடவிற்கு எதிரான குற்றப்பத்திரிகையை முன் கொண்டு செல்ல போவதில்லையென சட்டமா அதிபர் அறிவிப்பு

by Staff Writer 13-10-2021 | 4:05 PM
Colombo (News 1st) முன்னாள் கடற்படைத் தளபதி Admiral of the Fleet வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை தொடர்ந்தும் முன் கொண்டு செல்ல போவதில்லையென சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளார். 2008, 2009 ஆம் ஆண்டுகளில் கொழும்பில் வௌ்ளை வேன்களை பயன்படுத்தி 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில் சட்ட மா அதிபரினால் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வசந்த கரன்னாகொடவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நீதிபதிகளான சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக்க கனேபொல ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி அவந்தி டி பெரேரா இதனை மன்றில் அறிவித்தார். இதனிடையே, சாட்சிகளை முறையாக பரிசீலிக்காமல், 11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் கடற்படை பேச்சாளர் டீ.கே.பீ. தசநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதா என கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று சட்டமா அதிபரிடம் வினவியது. முன்னாள் கடற்படை பேச்சாளர் டீ.கே.பீ. தசநாயக்க உள்ளிட்ட ஏனைய பிரதிவாதிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலான சாட்சியங்களை மீள் பரிசீலனை செய்வதற்கு சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளதாக சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகிய அரச சிரேஷ்ட சட்டத்தரணி யுஹான் அபேவிக்ரம மன்றில் அறிவித்த சந்தர்ப்பத்திலேயே நீதிபதிகள் குழாம் இந்த கேள்வியை எழுப்பியது. இந்த வழக்கு சம்பா ஜானகி ராஜரத்ன, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய நீதிபதிகளைக் கொண்ட குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.