இராகலை தீ விபத்து: உயிரிழந்தவரின் மகனுக்கு விளக்கமறியல்

இராகலை தீ விபத்து: உயிரிழந்தவரின் மகனுக்கு விளக்கமறியல்

இராகலை தீ விபத்து: உயிரிழந்தவரின் மகனுக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

13 Oct, 2021 | 11:15 am

Colombo (News 1st) நுவரெலியா – இராகலை தோட்டத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வலப்பனை நீதவான் D.R.S. குணதாச முன்னிலையில் சந்தேகநபரை நேற்று (12) மாலை ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

உயிரிழந்த இராமையா தங்கையா என்பவரின் மகனே சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

இராகலை தோட்டம் முதலாம் பிரிவிலுள்ள தற்காலிக வீடு ஒன்றில் கடந்த 07 ஆம் திகதி இரவு தீ பரவியது. இதன்போது, வீட்டிலிருந்த 05 பேர் தீக்கிரையாகிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

குறித்த வீட்டில் 6 பேர் வசித்து வந்த நிலையில், 1 வயது மற்றும் 12 வயதான இரண்டு சிறுவர்கள் உட்பட ஐவர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

61 வயதான இராமையா தங்கையா, அவரின் மனைவியான 57 வயதான செவனமுத்து லெட்சுமி, 34 வயதான மகள் தங்கையா நதியா மற்றும் பேரப்பிள்ளைகளான சத்தியநாதன் துவாரகன், மோகன்தாஸ் ஹெரோசன் ஆகியோரே தீக்கிரையாகி உயிரிழந்தனர்.

தங்கையாவின் மகனான இரவீந்திரன் தீ பரவிய போது, மது போதையில் வீட்டின் வெளியே இருந்த நிலையில் உயிர் தப்பியிருந்தார்.

பிரேத பரிசோதனையின் பின்னர் கடந்த 09 ஆம் திகதி இரவு இராகலை தோட்ட பரிச்சகாடு பொது மயானத்தில் ஒரே புதைகுழியில் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டன.

இந்த  நிலையில், சம்பவம் தொடர்பில் இராகலை பொலிசார் உட்பட மேலும் பல பொலிஸ் குழுக்கள்  கடந்த 05 நாட்களாக  விசாரணையில் ஈடுபட்டு வந்திருந்தனர்.

இதன்போது, சம்பவத்தில் உயிர் தப்பியிருந்த தங்கையாவின் மகனான இரவீந்திரனை இராகலை பொலிசார் கைது செய்து நேற்று மாலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்