மன்னாரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கீழக்கரையில் மீன்கள் இறந்து கரையொதுங்கல்

by Bella Dalima 12-10-2021 | 11:17 AM
Colombo (News 1st) தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் - கீழக்கரை கடலில் மீன்கள் உயிரிழந்து மிதப்பதால் அப்பகுதி மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். இராமநாதபுரத்தில் கீழக்கரையில் உள்ள ஜெட்டி பாலம், மீனவர் குப்பம், பாரதிநகர் உள்ளிட்ட கடல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடல் நீர் மாற்றமடைந்து பச்சை நிறத்தில் காணப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று (11) கடலில் பல விதமான அரிய வகை மீன்கள் உயிரிழந்து கரையொதுங்கியுள்ளன. இதனால் கீழக்கரை பகுதியில் உள்ள மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர் அத்துடன், மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி தமது அச்சத்தை நீக்கவேண்டுமென மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குறித்த பகுதி மன்னாரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.