கனேடிய உயர்ஸ்தானிகரும் நோர்வே, நெதர்லாந்தின் தூதுவர்களும் வடக்கு, கிழக்கிற்கு விஜயம்

by Bella Dalima 12-10-2021 | 8:14 PM
Colombo (News 1st) கனேடிய உயர்ஸ்தானிகரும் நோர்வே, நெதர்லாந்தின் தூதுவர்களும் மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இன்று (12) விஜயம் செய்துள்ளனர். இலங்கைக்கான நோர்வே தூதுவர் Trine Joranli Eskedal மற்றும் நெதர்லாந்து தூதுவர் Tanja Gonggrijp ஆகியோர் மட்டக்களப்பில் இன்று சந்திப்புகளில் கலந்துகொண்டிருந்தனர். இரு நாடுகளினதும் தூதுவர்கள், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் அரசாங்க அதிபர் கே.கருணாகரன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினர். இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனை மட்டக்களப்பிலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் சந்தித்து இவர்கள் கலந்துரையாடினர். கிழக்கு மாகாண மக்களின் பல்வேறுபட்ட தேவைகள், பிரச்சினைகள் குறித்து இதன்போது அவர்களுடன் கலந்துரையாடியதாகவும் அரசாங்கத்தினூடாக மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி சார்ந்த செயற்பாடுகளை எடுத்துக்கூறியதாகவும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். இதனிடையே, நோர்வே மற்றும் நெதர்லாந்து தூதுவர்கள், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரனையும் மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவனையும் சந்தித்து கலந்துரையாடினர். 13 ஆம் திருத்த சட்ட அமுலாக்கம், மட்டக்களப்பின் பரம்பல் நிலையை மாற்றியமைப்பதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற குடியேற்றத் திட்டங்கள் குறித்து தூதுவர்களுடன் கலந்துரையாடியதாக மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தியாகராஜா சரவணபவன் குறிப்பிட்டார். மேலும், தமிழர்களின் அரசியல் நகர்விற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு அவர்களிடம் கோரியதாகவும் தெரிவித்தார். இதனிடையே, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் David McKinnon, யாழ். மாநகர மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை இன்று சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, கனடாவின் டொரன்டோ மாநகர சபைக்கும் யாழ். மாநகர சபைக்கும் இடையில் இருக்கின்ற ஒப்பந்தம் தொடர்பாக David McKinnon உடன் கலந்துரையாடியதாக யாழ். மாநகர சபை மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். அரசியல் தீர்வு தொடர்பாகவும் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற அழிப்புகள் தொடர்பாகவும் அவருக்கு தௌிவூட்டியதாக மணிவண்ணன் மேலும் குறிப்பிட்டார்.