உலகளாவிய தொற்றுக்கு பின்னர் பஞ்சம் ஏற்படும் என்கிறார் வர்த்தக அமைச்சர்; இடமளிக்கப்போவதில்லை என்கிறார் நிதி அமைச்சர்

by Bella Dalima 12-10-2021 | 8:46 PM
Colombo (News 1st) உலகில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தொற்று நிலைமையின் பின்னர் பட்டினியே உருவாவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார். எண்ணெய் விலையை அதிகரிப்பதற்கான தேவை தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில், அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை கூறினார்.
ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை இன்னும் ஓரிரு நாட்களில் 100 ரூபாவை தாண்டும். ஆகவே, மசகு எண்ணெய் விலை அதிகரிக்கும். எரிவாயு விலை, பால்மா விலை, பருப்பு விலை ஆகியனவும் அதிகரிக்கும். தொற்று நிலைமைக்கு பின்னர் உலகில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பட்டினியே ஏற்பட்டுள்ளது. உலகில் இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் ஆகிய அனைத்து நாடுகளிலும் இந்த பொருட்களின் விலை எமது நாட்டின் விலையை விட அதிகமானது.
என பந்துல குணவர்தன கூறினார். மேலும், பெட்ரோலிய அமைச்சரால் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாது எனவும் அதிக விலைக்கு கொள்வனவு செய்து குறைந்த விலையில் வழங்க முடியாது எனவும் மாதாந்தம் ஆயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே, நாட்டில் எந்த விதத்திலும் பஞ்சம் ஏற்படுவதற்கு இடமளிக்கப்போவதில்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்தார். விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய இராஜாங்க அமைச்சுடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையின் போது அவர் இதனை கூறினார். அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு மேலதிகமாக உற்பத்தி பொருளாதாரத்துடன் தொடர்புடைய திட்டங்களுக்காக மேலும் 25,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டார். வரவு செலவுத் திட்டத்தில் ஒரு வருடத்திற்கு நிதி ஒதுக்கப்படாமல், அந்தந்த திட்டங்களின் முன்னேற்றத்தை ஆராய்ந்து ஒவ்வொரு காலாண்டுக்கும் நிதி ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்தார். முதல் காலாண்டில் வெற்றியளிக்காத திட்டங்களுக்கு மீண்டும் நிதி ஒதுக்காதிருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிதி அமைச்சர் அறிவித்தார்.